புதன், 7 ஜூலை, 2010

தமிழ் பேசுகிறவன் தமிழன்!!!!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்த அமைச்சரவைக் கூட்டத்தில், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.
மாநாட்டில்கூட, கடல் கடந்து வாழும் தமிழர்கள் பற்றிய கலந்துரையரங்கம் நடைபெற்றது. அதில் பங்கு கொண்டு பேசியவர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, அடையாளச் சிக்கல், தமிழ் கற்பதில் அடையும் இடையூறுகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டனர். இதே பொருண்மையில் ஆய்வரங்கமும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது அமைச்சரவைக் கூட்டத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனித் துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. இது பாராட்டுக்குரிய, வரவேற்கத்தக்கது.
ஏற்கெனவே, கேரளத்தவர் நலன் காக்கும் துறை, கேரள மாநிலத்தில் இருக்கிறது என்றும், அதன் அடிப்படையில் தமிழர் நலன் காக்கும் துறையை அமைக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விஷயத்தில் கேரள மாநிலத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டுமா என்பதை சற்று சிந்திக்க வேண்டும். அவர்களைப் போலவே நாம் சிந்திப்போமேயானால், இந்தியக் குடிமகன்களாக இருக்கும் தமிழர்கள் என்கிற அடையாளச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு, மற்ற தமிழர்களுக்கு உதவ முடியாத நிலையை நாமே உருவாக்கிக் கொள்வதாக ஆகிவிடும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் நலனையும் கருத்தில் கொள்ளாமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் என்று தனியாகப் பிரித்து, பிளவுபடுத்திப் பார்க்க முடியாது என்கிற நிலைமை உள்ளதைக் கருத்தில்கொள்ளும்போது, இந்தியக் குடிமகனாகிய தமிழன் என்கிற நிபந்தனை சரிப்பட்டுவரும் என்று தோன்றவில்லை.
வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமகன் அல்லாத தமிழர்களுக்காக ராஜீய ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இந்திய அரசுக்கு சிக்கல்கள் எழும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், தமிழக அரசு, தான் ஏற்படுத்தவுள்ள வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்கும் துறைக்கு, இந்தியக் குடியுரிமை என்ற நிபந்தனைகள் தேவையற்றது என்பது மட்டுமல்ல, அத்தகைய நிபந்தனை தமிழர் நலனுக்கே எதிராகவும் மாறிவிடும் ஆபத்து உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கைப் பிரச்னையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பல லட்சம் பேர் உள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளிலும் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, 115 முகாம்களில் 73,572 பேரும், பெயர் பதிவு செய்துகொண்டு முகாமுக்கு வெளியே 30,000 பேரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்று, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு எத்தகைய முடிவை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை.
மேலும், தமிழகத் தமிழர்களும்கூட, வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்ற பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் குடிமகன்களாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதையும், ஆகவே அவர்கள் தற்போது இந்திய குடிமகன்களாக இல்லாமல் வெளிநாடு வாழ் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியக் குடிமகன் இல்லை என்பதாலேயே அவர்களைத் தமிழர்கள் அல்லர் என்று சொல்லிவிட முடியுமா? உதாரணமாக, அண்மையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை, அவர் தான் சிதம்பரத்தில் 3 வயது வரைதான் வாழ்ந்தேன் என்று கூறினாலும்கூட, நாம் தமிழராகத்தானே பார்க்கிறோம். அவரை இந்தியராகக் கருதி "பத்மவிபூஷண்' விருது வழங்கப்படுகிறது. தமிழராகக் கருதி தமிழ்நாட்டுக்கு அழைத்து பாராட்டுகள் அளிக்கப்படுகிறது.
இதேபோன்றுதான், எந்த நாட்டில் வாழ்கின்ற, எத்தகைய தமிழராக இருந்தாலும், அவர் எந்த நாட்டின் குடியுரிமை பெற்ற தமிழராக இருந்தாலும், தமிழர் என்கிற அடையாளம் உள்ளவரை அவர் நலனில் தமிழகமும் அக்கறை காட்டும் என்கின்ற விதமாக, தற்போது ஆலோசிக்கப்படும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைய வேண்டும்.
அவர்கள் இந்தியக் குடிமகன் இல்லை என்றாலும்கூட, தமிழர் என்ற முறையில் உதவிக் கரம் நீட்ட தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. இந்திய அரசின் ராஜீய உறவுகள் வேறு, தமிழக அரசின் தமிழர் நலன் காக்கும் துறை வேறு என்பதைப் புரிந்துகொண்டால் இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாது. ஒருமுறை, கர்நாடகத்தில் தமிழர் மீதான தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "நடிகர் ரஜினிகாந்த் தமிழரா?' இக்கேள்விக்கு முதல்வர் அளித்த பதில்: "தமிழ் பேசுகிறவர் தமிழர்!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக